2026ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்ல வேண்டும் என்பதே இலக்கு எனவும், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்பது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை உறுதி செய்வதாகவும் திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மேலும் சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 221 தொகுதிகளில் திமுக கூட்டணி முதலிடம் பெற்றுள்ளது. இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கோவையில் வருகிற ஜூன் 15ம் தேதி முப்பெரும் விழா நடைபெற உள்ளது.
இதில் தமிழ்நாடு முழுவதும் வெற்றிபெற்ற 39 எம்பிக்களும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்சி தொண்டர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ’தமிழ்நாட்டில் திமுக பெற்றுள்ள வெற்றி இந்தியா கூட்டணிக்கு மட்டுமின்றி இந்திய ஜனநாயகத்திற்கும் நம்பிக்கை அளித்து இருக்கிறது. மத்திய அரசில் பங்கேற்கும் வாய்ப்பு இல்லாதபோது 40க்கு 40 என்ற வெற்றியால் தமிழ்நாட்டிற்கு என்ன லாபம் என்று எதிர் முகாமில் இருக்கும் சிலர் கேட்கின்றனர்? அது கேள்வி அல்ல. அவர்களின் தோல்வி புலம்பல்.’
‘நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கி உள்ள உரிமைகளை அறிந்தவர்களுக்கும் இது நன்கு தெரியும். தமிழ்நாட்டின் 40 க்கு 40 உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பரவலான வெற்றி தான், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்பு கவசம். மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது போல், 2026 சட்டமன்ற தேர்தலிலும் 200க்கு மேலான தொகுதிகளில் வெற்றியினை உறுதி செய்திட வேண்டும். இதற்காக ஜூன் 15 கோவை முப்பெரும் விழா நமக்கு ஊக்கமளிக்கும் இடமாக அமையட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.