சேலத்தில் தனியார் பேருந்து ஒன்று ஆட்சாங்குட்டப்பட்டியில் இருந்து நகர பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த போது அயோத்தியா பட்டணம் அருகே உள்ள சுக்கம்பட்டி என்ற பகுதியில் சென்ற போது இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில், 2 இரு சக்கர வாகனங்களில் பயணித்த ஒரு சிறுவன் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக வீராணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், முன்பகுதியில் லாரி சென்றுள்ளது பின்னால் 2 இருசக்கர வாகனங்களில் குழந்தை உட்பட 5 பேர் பயணித்துள்ளனர். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். இது மட்டுமல்லாமல் இரு சக்கர வாகனத்தில் பயணித்த ஒருவர் மற்றும் பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் வேகத்தடை காரணமாக முன்னே சென்று கொண்டிருந்த லாரி மெதுவாக அந்த வேகத்தடையை கடக்க முயன்றுள்ளது. அப்போது லாரியின் பின்னால் 2 இருசக்கர வாகனங்கள் மெதுவாக வந்து கொண்டிருந்துள்ளது. இரு சக்கர வாகனத்திற்கு பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. மேலும் விபத்துக்கு காரணமான ஓட்டுநர் வீராணம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு சக்கர வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.