ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான விழாவில் பதவியேற்றுக்கொண்டார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் அமைச்சரானார். மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 164 தொகுதிகளில் இக்கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற அவை தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர், தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி ஆந்திர மாநில ஆளுநர் அப்துல் நசீரிடம் கூட்டணி கட்சியினர் கடிதம் வழங்கினர். இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவை ஆட்சி அமைக்க ஆளுநர் அப்துல் நசீர் நேற்று இரவு அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து, விஜயவாடா விமான நிலையம் அருகே கேசரபல்லி எனும் இடத்தில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் பதவி ஏற்பு விழா வெகு பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாகனங்கள் நிறுத்த சுமார் 60 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழாவுக்கு பிரதமர் மோடி வருகை புரிந்திருந்தார். மேலும், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜேபி. நட்டா, நிதின் கட்கரி, ராம்மோகன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ராம்சரண் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கைய்ய நாயுடு, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், ராம்கோ குரூப், ஈஸ்வரி க்ரூப் நிறுவனத்தார், ஆந்திர பாஜக தலைவர் புரந்தேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நடந்து முடிந்த ஆந்திர மாநில தேர்தலில் நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் முக்கிய பங்கு வகித்தார். இவரது கட்சி, வழங்கப்பட்ட 21 பேரவை, மற்றும் 2 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராக முக்கிய பங்கு வகித்த பவன் கல்யாணுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் ஜனசேனா கட்சியில் இருந்து 3 பேரும், பாஜகவில் இருந்து ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். சந்திரபாபு நாயுடு தவிர்த்த 24 அமைச்சர்களில் 3 பேர் பெண்கள். புதிய முகங்கள் 17 பேருக்கு சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.