“உங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும் நலத்தையும் கொண்டு வரட்டும். இருமாநில முன்னேற்றத்துக்காக, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழகம் இடையேயான நட்பையும் கூட்டுறவையும் வலுப்படுத்த ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளேன்,” என்று ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஆந்திர பிரதேச மாநில முதல்வராக நான்காவது முறையாகப் பொறுப்பேற்றிருக்கும் என்.சந்திரபாபு நாயுடுவுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். உங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும் நலத்தையும் கொண்டு வரட்டும். இருமாநில முன்னேற்றத்துக்காக, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழகம் இடையேயான நட்பையும் கூட்டுறவையும் வலுப்படுத்த ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளேன்,” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான விழாவில் பதவியேற்றுக்கொண்டார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் அமைச்சரானார். மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.