கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பர்ட் எம்எல்ஏ-வாக இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த விஜயதாரணி, அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து அவர் தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் சேர்த்து நடத்தப்பட்டது. இத்தொகுதியில் இந்த முறை திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பர்ட், பாஜக சார்பில் வி.எஸ்.நந்தினி, அதிமுக சார்பில் ராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இதில் காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பர்ட் 91,054 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தாரகை கத்பர்ட் சட்டப் பேரவையில் இன்று உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். சபாநாயகர் அப்பாவு முன்னிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் தாரகை கத்பர்ட் எம்எல்ஏ-வாக பதவியேற்று கொண்டார். அவருக்கு அங்கிருந்த அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.