நாடாளுமன்ற புகைகுண்டு வீச்சு சம்பவத்தில் கைதான நபர்களிடம் இருந்து கைப்பற்ற வீடியோக்களால், அந்த வழக்கின் விசாரணை வேகமெடுத்துள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் 13 அன்று இந்திய நாடாளுமன்ற அவையினுள் அத்துமீறலாய் புகைக்குண்டு வீசப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வந்தபோது அன்றைய தினம் பார்வையாளர் அரங்கிலிருந்து அத்துமீறி அவைக்குள் குதித்த 2 இளைஞர்கள், முழக்கமிட்டபடியே சபாநாயகரின் இருக்கையை நோக்கி ஓடினார்கள். மேலும், தங்கள் வசமிருந்த புகைக் குண்டுகளை வீசி அவை உறுப்பினர்களை பதற வைத்தனர்.
எம்.பி-க்களில் சிலர் துணிந்து செயல்பட்டு, இருவரையும் பிடித்து சபை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். கைதான இளைஞர்கள் கர்நாடக மாநிலம், மைசூருவைச் சேர்ந்த பொறியியல் மாணவர் மனோ ரஞ்சன் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாகர் சர்மா என்பது விசாரணையில் தெரியவந்தது. அதே தருணத்தில், நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வெளியேயும் ஹரியாணாவை சேர்ந்த நீலம், மகாராஷ்டிராவை சேர்ந்த அன்மோல் ஷிண்டே ஆகிய 2 பெண்கள் முழக்கங்களை எழுப்பியபடி தங்கள் பங்குக்கு புகைக் குண்டுகளை வீசினர். அவர்களையும் காவலர்கள் வளைத்து கைது செய்தனர்.
இந்த 4 பேர் கைதுடன், அவர்களுடன் இணைந்து செயல்பட்டதாக மேலும் சிலர் பின்னர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் முழுப் பின்னணி, தடை செய்யப்பட்ட அமைப்புகளுடனான அவர்களின் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அண்மையில் போலி ஆவணங்களை வழங்கி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றதாக சிலர் கைது செய்யப்பட்டனர். நாடாளுமன்ற வளாகத்தினுள் நடைபெறும் கட்டிடப் பணிகளுக்கான தொழிலாளர்கள் என விளக்கம் பெறப்பட்டாலும், அவர்கள் போலி ஆவணங்களை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே நாடாளுமன்ற புகைகுண்டு வீச்சு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் கைப்பற்றபட்ட எலெக்ட்ரானிக் சாதங்களை ஆய்வு செய்தபோது, கொசாவோ நாடாளுமன்றத்தில் நடைபெற்ற புகைகுண்டு வீச்சு தொடர்பான வீடியோக்கள் மீட்கப்பட்டன. செர்பியாவிலிருந்து தனி தேசமாக பிரிந்திருக்கும் கொசாவோ நாடாளுன்ற அவையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்க்கட்சி எம்பிக்கள் தங்கள் போராட்டத்தின் அங்கமாக புகைகுண்டுகளை வீசி களேபரம் செய்தனர். இந்த வீடியோக்களின் அடிப்படையிலேயே இந்திய நாடாளுமன்றத்தில் புகைகுண்டுகளை வீச திட்டமிடப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, புகைகுண்டு வீச்சு சம்பவத்தில் கைதானவர்களுக்கு, சர்வதேச அளவில் நீளும் தொடர்புகள் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.