இந்த ஆண்டு வழக்கம்போல் ஜூன் 12- ல் மேட்டூரில் தண்ணீர் திறக்காததைக் கண்டித்து நாகையில் விவசாயிகள் கதவணைக்கு மாலை அணிவித்து கைவிடப்பட்ட குறுவைக்கு மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12- ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டாவில் குறுவை சாகுபடி செய்வதற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்காமல் ஏமாற்றி வருகிறது. இதனால் டெல்டாவில் குறுவை சாகுபடியும் அதனைத் தொடர்ந்து சம்பா சாகுபடியும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த வருடம் ஜூன் 12 ல் குறுவை சாகுபடிக்கு தமிழக அரசு தண்ணீர் திறந்துவிட்டாலும் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க மறுத்ததால் மேட்டூரில் தண்ணீர் குறைந்து சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவைப் பயிர்கள் கருகி நாசமாகின. இந்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூரில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் இன்று தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் கவலையடைந்துள்ள நாகை விவசாயிகள் நாகை மாவட்டம் தேவூர் அடுத்துள்ள ஆத்தூர் பாசன வாய்க்கால் கதவணைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அப்போது, மத்திய மற்றும் கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று தண்ணீர் திறக்காத காரணத்தால் மேட்டூர் அணை நீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் நான்கரை லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த வருடம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 97.5 டி.எம்.சி தண்ணீரை வழங்காமல் ஏமாற்றிய கர்நாடகா அரசு இந்த ஆண்டும் தமிழகத்துக்கான தண்ணீரை இதுவரை திறந்துவிடவில்லை.
கர்நாடக அரசு இதுவரை காவிரியில் தண்ணீர் வழங்காத காரணத்தால் குறுவை சாகுபடி தொடங்குவது கேள்விக்குறி ஆகியுள்ளது. எனவே, “குறுவை சாகுபடிக்கு விரைந்து காவிரி நீரை தமிழக அரசு, கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசிடம் பேசி பெற்றுத்தர வேண்டும். காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையை கர்நாடக அரசு ஏற்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் அதிகாரமிக்க ஆணையமாக செயல்பட வேண்டும். இவை அனைத்தையும் மோடி அரசு செயல்படுத்த வேண்டும்” என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
“ஏற்கெனவே தமிழகத்தை வஞ்சித்து வரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நீர்வளத்துறை இணையமைச்சர் பதவி வழங்கியுள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அவரது இணையமைச்சர் பதவியை திரும்பப் பெறவேண்டும்” எனவும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.