கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று சொல்வது கூட்டணிக்கு முரண்பாடானது இல்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை தேனாம்பேட்டையில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் பேசியபோது, காங்கிரஸ் கட்சி பிற கட்சிகளை சாராத நிலைக்கு வளர வேண்டும் என்று பேசியிருந்தார். இந்நிலையில், அவரது பேச்சு குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- “தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் ஆரம்பம் சரியாக இல்லை. ஏற்கனவே இருந்த மந்திரிகளை மீண்டும் அதே துறைகளில் நியமித்துள்ளனர். இவர்களிடம் மாற்று சிந்தனையோ அல்லது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் எண்ணமோ இல்லை. தமிழ்நாட்டில் இருக்கும் தெளிவான சிந்தனை மற்ற மாநில மக்களிடமும் வர வேண்டும்.
அனைத்து கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று சொல்வது வாடிக்கையானதுதான். அந்த வகையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் கூட்டணியால்தான் வெற்றி பெற்றோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயம் எங்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று சொல்வது கூட்டணிக்கு முரண்பாடானது இல்லை” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.