இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாகும் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி : வியப்பூட்டும் முழுப் பின்னணி

பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் பரந்த அனுபவம் பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி என்பவரை, நாட்டின் ராணுவ புதிய தளபதியாக மத்திய அரசு தேர்வு செய்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

இந்திய ராணுவத்தின் அடுத்த தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி என்பவரை மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போதைய இந்திய ராணுவ ஜெனரல் மனோஜ் பாண்டே இம்மாதம் 30 அன்று ஓய்வு பெறுவதை அடுத்து, உபேந்திர திவேதி பொறுப்பேற்க இருக்கிறார். லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி, சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைகளில் பரந்த செயல்பாட்டு அனுபவத்தைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவராக இவர் பணியாற்றி வருகிறார்.

கடந்த மாதம், ஜெனரல் பாண்டேவின் பதவிக்காலத்தை ஒரு மாதத்துக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பொதுத்தேர்தல் நடைமுறைகள் காலத்தில் புதிய தளபதி அறிவிப்பை தவிர்க்கும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இதன்படி மே 31 அன்று ஜெனரல் பாண்டே ஓய்வுபெறுவதற்கு 6 நாட்களுக்கு முன்பாக, அவரது பதவிக்காலம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது மீண்டும் மோடி தலைமையிலான அரசு அமைந்ததும், அடுத்த தளபதிக்கான பரிசீலனையில் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் நேற்றிரவு தெரிவித்தது. இவர் ஜூன் 30 அன்று பிற்பகல் முதல் ராணுவத்தின் புதிய தளபதியாக செயல்படுவார்.

ஜூலை 1, 1964-ல் பிறந்த உபேந்திர திவேதி, ரேவாவில் உள்ள சைனிக் பள்ளியில் பயின்றவர். மேலும் தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் அமெரிக்க ராணுவ போர் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி மற்றும் மோவ் ராணுவப் போர்க் கல்லூரியிலும் படிப்புகளை முடித்துள்ளார். பாதுகாப்பு மற்றும் மேலாண்மைப் படிப்பில் எம்பில் பட்டம் பெற்றவர். வியூகங்கள் வகுப்பது மற்றும் ராணுவ அறிவியலில் இரண்டு முதுகலைப் பட்டங்களையும் பெற்றுள்ளார். டிசம்பர் 15, 1984-ல் இந்திய இராணுவத்தின் ’18 ஜம்மு மற்றும் காஷ்மீர் ரைபிள்ஸில்’ முதலில் இவர் நியமிக்கப்பட்டார். பின்னர் அந்த பிரிவுக்கு தலைமை தாங்கியதில், அவரது ராணுவ சேவை தொடங்கியது.

லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம், அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் உள்ளிட்டவற்றை பெற்றவர். வடக்கு ராணுவத் தளபதியாக இருந்தபோது, வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளின் பாதுகாப்பு வியூகங்களை திட்டமிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும் வழிகாட்டுதல் மற்றும் செயல்பாட்டு மேற்பார்வையை வழங்கி உள்ளார். ஜம்மு காஷ்மீரின் தீவிர பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டதிலும் அவர் பெயர் பதிவாகி இருக்கிறது. இந்த காலகட்டத்தில், சீன எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக உபேந்திர திவேதி சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்திய ராணுவத்தின் கட்டமைப்பை நவீனமயமாக்குவதிலும், ஆயுதங்கள் தரிப்பதிலும் முக்கிய பங்களித்துள்ளார். ஆத்மநிர்பார் பாரத் என்பதன் அங்கமாக உள்நாட்டு உபகரணங்களின் தயாரிப்புக்கு வித்திட்டுள்ளார். ஏறக்குறைய 40 ஆண்டுகள் நீடித்த அவரது நீண்ட ராணுவ சேவையில், வெளிநாட்டு நியமனங்களிலும் பணியாற்றி அனுபவத்தில் பழுத்திருக்கிறார்.