“மக்கள் இந்தியா கூட்டணி பக்கம்” – பிரதமர் மோடியை விமர்சித்த சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவார், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவின் அஹல்யா நகரில் நடைபெற்ற பேரணியில் அவர் கூறியதாவது:

“நம் நாட்டின் மக்கள் பிரதமர் மோடிக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை வழங்கவில்லை. மத்தியில் ஆட்சி அமைக்க சாமானிய மக்களின் சம்மதத்தை அவர் பெறவில்லை. அவர் அதற்கு கூட்டணி கட்சியினரின் உதவியை நாடினார். தேர்தலின் போது எங்குமே இந்திய அரசு என்று அவர் சொல்லவில்லை. மாறாக ‘மோடி அரசு’, ‘மோடியின் உத்தரவாதம்’ என்று தான் சொன்னார்.

தேர்தல் முடிவுகளின் மூலம் நாட்டு மக்கள் இந்தியா கூட்டணி பக்கம் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அவர் இங்கு பரப்புரைக்கு வந்திருந்தார். என்னை அங்கும் இங்கும் அலைந்து திரியும் ஆன்மா என்றார். இந்த ஆன்மா இங்கு நிலைத்து இருக்கும். உங்களை (மக்கள்) விட்டு ஒருபோதும் பிரியாது.

இந்த ஆன்மா அலைந்து திரியும் ஆன்மா தான். ஆனால், அது மக்களின் குறைகளுக்காக மட்டுமே. ஒருபோதும் தன்னலம் அதில் இருக்காது. மைனாரிட்டி மக்களும் இந்த நாட்டின் பகுதியாக உள்ளனர். ஆனால், தனது தேர்தல் பரப்புரை அவர்களை விமர்சிக்கும் வகையில் பிரதமர் மோடி பேசியிருந்தார்” என அவர் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் 8 மக்களவைத் தொகுதிகளில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.