“அமராவதியே ஆந்திராவின் தலைநகர்” – சந்திரபாபு நாயுடு உறுதி

“அமராவதியே ஆந்திராவின் தலைநகராக இருக்கும். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்போம். பழிவாங்கும் அரசியலை செய்யப்போவதில்லை” என்று பதவியேற்பதற்கு ஒருநாள் முன்னதாக இன்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வென்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்ற கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். நாளை நான்காவது முறையாக ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ளார்.

பதவியேற்பதற்கு ஒருநாள் முன்னதாக இன்று, ஆந்திராவின் தலைநகர் குறித்து விளக்கமாகப் பேசியுள்ளார் சந்திரபாபு நாயுடு. அதில், “ஆந்திராவின் ஒரே தலைநகராக அமராவதி தான் இருக்கும். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்போம். பழிவாங்கும் அரசியலை செய்யப்போவதில்லை. மூன்று தலைநகர், நான்கு தலைநகர் என வஞ்சக செயல்களால் மக்களோடு விளையாட மாட்டோம். அமராவதி தான் எங்களின் தலைநகர். அதேநேரம், விசாகப்பட்டினம் மாநிலத்தின் வர்த்தக தலைநகராக இருக்கும். மேலும் ராயலசீமாவையும் வளர்ச்சியடையச் செய்வோம். போலாவரம் திட்டமும் நிறைவேற்றப்படும்.” என்றார்.

2019ல் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவுக்கு 3 தலைநகர் என அறிவித்தார். விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகராகவும், அமராவதி சட்டமன்ற தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் இருக்கும் என அறிவித்தார். மார்ச் 2022ல் அமராவதியை ஆந்திர தலைநகராக உருவாக்க அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து ஜெகன் அரசு அந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தான், தற்போது அமையவுள்ள புதிய அரசு அமராவதியை தலைநகராக உருவாக்கும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.