இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய மாணவர் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் சூர்யா தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வு குளறுபடிகளை சுட்டிக் காட்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாணவர் சங்கத்தினர் கோஷம் எழுப்பினர். அப்போது போலீஸார் அவர்களை கைது செய்ய முயன்ற போது, அவர்களில் சிலர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சிலர் அஞ்சல் அலுவலக வாசலில் இருந்த தடுப்புகளை தாண்டி குதித்து அஞ்சல் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாநகர குற்றப் பிரிவு காவல் உதவி ஆணையர் கே.முருகவேல் தலைமையிலான போலீஸார் தடுப்புகளை தாண்ட முயன்ற மாணவர்களை இழுத்தனர். இதில் நிலை தடுமாறி விழுந்த மாணவர்கள் மீது போலீஸாரும் விழுந்தனர். போலீஸாரும், மாணவர்களும் சாலையில் கட்டிக்கொண்டு உருண்டனர்.
ஒரு மாணவர் தடுப்புகளை தாண்டி அஞ்சல் அலுவலக நுழைவாயில் கதவு மீது ஏற முயன்றார். அவரையும் போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கி வந்தனர். சுமார் பத்து நிமிட போராட்டத்துக்கு பிறகு போலீஸார் நான்கு மாணவிகள் உட்பட 11 பேரை கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.