தையூர் பங்களாவுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி 

தையூர் பங்களாவுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தையூர் பங்களாவுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பலாமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு ராஜேஷ் தாஸ் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. பீலா வெங்கடேசன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், தையூர் பங்களாவுக்கும், ராஜேஷ் தாஸூக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருக்கு எந்த உரிமையும் இல்லாத நிலையில் மின் இணைப்பு வழங்கும்படி கோர முடியாது, என்றார்.

ராஜேஷ் தாஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.பிரகாஷ், அந்த பங்களாவுக்கான வீட்டுக்கடனை மனுதாரர் தான் செலுத்தி வருகிறார். மனுதாரர் அங்கு தான் வசித்து வருகிறார். எனவே, அவருடைய உடல் நலனைக் கருத்தில் கொண்டு மீண்டும் மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும், என வாதிட்டிருந்தனர். இதையடுத்து வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி அனிதா சுமந்த், தையூர் பங்களாவுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்ற ராஜேஷ்தாஸின் கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.