கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி திறக்கப்பட்ட இன்று மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். புதிய மாணவர்களுக்கு பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி, இயக்குனர் சுதர்சன் ஆகியோர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.
ஆசிரியைகள் மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்தி வகுப்பிற்கு அழைத்துச் சென்றனர். பள்ளி வளாகத்தில் பெற்றோர்களோடு மாணவர்களும் இணைந்திருக்கும் புகைப்படம் உடனடியாக வழங்கப்பட்டது. மாணவர்களும் பெற்றோர்களும் அதனால் மகிழ்ச்சி அடைந்தனர். பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் ஆசிபெற்ற பிறகு மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழைந்தனர். மாணவர்கள் இந்தவாரம் முழுவதும் பாட நூல்கள் கொண்டுவரவேண்டாம் என்றும் இவ்வாரத்தில் நீதிபோதனை வகுப்புகள், மருத்துவ ஆலோசனைகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், கதைகள், பாடல்கள் என மாணவர்கள் மனதைப் பக்குவப்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தி தெரிவித்தார்.
பள்ளியில் வாழைமரம், தோரணங்கள் கட்டப்பட்டு புதுக்கோலமிட்டு மாணவர்களை வரவேற்க எழில் கோலம் பூண்டிருந்தது. மாணவர்கள் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் புதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைத்தனர்.இந்நிகழ்வில் பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தி, பள்ளியின் இயக்குனர் சுதர்சன், துணை முதல்வர் குமாரவேல் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.