திருவண்ணாமலை அருகே தனியார் பள்ளியின் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக மாணவர்கள் உடனடியாக இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டதால் ஏராளமான மாணவர்கள் உற்சாகத்துடன் விடுமுறை முடிந்து பள்ளிகளுக்கு திரும்பினர். இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்பட்டது.
நெசல் கிராமத்தில் இயங்கும் ஆரஞ்ச் என்ற தனியார் பள்ளி சார்பில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் இன்று காலை வழக்கம் போல் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களை அங்கிருந்து ஏற்றிக்கொண்டு பள்ளி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதில் ஒரு பேருந்து 13 மாணவர்களுடன் பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. நடுக்குப்பம் கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென பேருந்தின் முன்புறம் புகை வருவதைக் கண்ட ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவர் மாணவர்கள் அனைவரையும் கீழே இறங்குமாறு கூறிவிட்டு, புகை வந்த பகுதியை பார்வையிட்டு உள்ளார். அப்போது திடீரென பேருந்து முன்புறம் தீ பிடித்தது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நல்வாய்ப்பாக மாணவர்கள் அனைவரும் இறங்கிச் சென்றதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி துவங்கப்பட்ட முதல் நாளிலேயே பள்ளிப் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.