மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி கொடுத்த ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக கோவையில் வருகிற 15ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாகவும், 40 எம்பி-களும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதையொட்டி திமுக சார்பில் மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு காரணமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கான விழா என மூன்று விழாக்களும் சேர்த்து முப்பெரும் விழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் இந்த நிகழ்ச்சி வருகிற 15ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி விழா நடைபெறும் கொடிசியா மைதானத்தில் பொதுக்கூட்ட மேடைக்கான கால்கோள் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்று அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த முயற்சி காரணமாக இந்தியா கூட்டணி அருமையான வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க முடியவில்லை என்றாலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மத்தியிலிருக்கும் அரசு தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்காமல், இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனையை கேட்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், “தேர்தல் என்று வந்தவுடனே வெளிப்படையாக 40 இடங்களில் திமுக வெற்றி பெரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆளும் கட்சியாக இருக்கிறோம் என்ற அடிப்படையில் எந்த ஒரு விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை. வடமாநிலங்களில் என்ன பிரச்சனை நடைபெறுகிறது என அனைவருக்கும் தெரியும். பெருவாரியான வாக்குகளை மக்கள் திமுகவிற்கு கொடுத்திருக்கிறார்கள். இதற்கு காரணம் கடந்த மூன்று ஆண்டுகளில் செய்த மக்கள் பணிதான். பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செய்தது தற்போது பலனளிப்பது இந்த வெற்றிக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ திமுகவினரும், திமுக கூட்டணியில் உள்ளவர்களும் கடுமையாக உழைத்திருப்பதன் காரணமாகவே இந்த மாபெரும் வெற்றி கிடைத்து இருக்கிறது. இந்திய துணைக்கண்டத்தில் எங்குமே நடக்காத மாபெரும் வெற்றியாக இது இருக்கிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நன்றி அறிவிப்பு கூட்டம் கோவை மாவட்டத்தில் நடைபெறுகிறது. மேற்கு மண்டலம் என பல பேர் பேசிக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு மொத்தமாக திமுக கையில் மேற்கு மண்டலம் இருக்கிறது என்பதை மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்” என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.