ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தாக்குதல் நடந்த ரியாஸி மாவட்டத்தில் இன்று காலை முதல் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக தாக்குதல் நடந்த அடர்ந்த வனப்பகுதியில் ராணுவத்தினர் ட்ரோன்களை பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையில் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேசிய புலனாய்வு முகமை குழு ரியாஸிக்கு வந்துள்ளது. இந்தக் குழுவானது நிகழ்விடத்தில் ஆய்வு செய்து தடையங்களை சேகரிக்கும் எனத் தெரிகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாஸி மாவட்டத்தில் உள்ள ரான்ஸூ என்ற பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின் மீது தீவிரவாதிகள் சிலர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் நிலை தடுமாறிய ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார். இதனைத் தொடர்ந்து பேருந்து அருகில் இருந்த ஒரு பெரிய பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த குழந்தை உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர். 33 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் யார் என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை என்றும் அவர்கள் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் போலீஸார் தெரிவிக்கின்றனர். பேருந்தில் இருந்தவர்கள் சிவ கோரி குகைக் கோயிலில் இருந்து ரியாஸி மாவட்டத்தில் உள்ள கத்ராவுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்ததாக ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.