பாஜக எம்பியாக தேர்வாகி இருக்கும் நடிகை கங்கனா ரனாவத் தனது பேச்சில் கவனமாக இருக்க வேண்டும் என பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான அகாலி தளம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாலிவுட் நடிகையான கங்கன ரனாவத் தனது பாஜக மற்றும் மோடி ஆதரவு சர்ச்சை கருத்துக்களால் பிரபலமானவர். அவரது சர்ச்சை மற்றும் உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் காரணமாக, ட்விட்டரில் தடை விதிக்கப்படும் அளவுக்கு கங்கனா தீவிரமாக இருந்தார்.
கங்கனாவின் பாஜக ஆதரவு நிலைப்பாடுக்கு பரிசாக அவருக்கு இமாச்சல பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதியில் போட்டியிட கட்சி சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவ்வாறு போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மகிழ்ச்சியை முழுமையாக கொண்டாடவிருந்த கங்கனா ரனாவத், சண்டிகர் விமான நிலையத்தில் நடந்த சம்பவம் ஒன்றால் நிலை குலைந்துள்ளார்.
சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தின் போது, ’போராட்டக்காரர்களை பிரிவினைவாதிகள் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை 100 ரூபாய்க்காக வந்தவர்கள்’ எனவும் கங்கனா ரனாவத் இழித்துப் பேசியது அடுத்த சர்ச்சையானது. இது நடந்து 2 வருடங்களுக்குப் பின்னர், 2 நாள் முன்னதாக சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் காவலர் ஒருவரால் கங்கனா தாக்கப்பட்டார்.
தனது தாயும் விவசாயிகளின் போராட்டக்களத்தில் அமர்ந்திருந்தார் என்றும், கங்கனாவின் இழிசொல் தன்னை மிகவும் பாதித்ததாகவும், பின்னர் அந்த பெண் காவலர் விளக்கமளித்தார். கங்கனாவின் கன்னத்தில் அறைந்த குல்வீந்தர் கவுர் என்ற பஞ்சாப் பெண் காவலர் பின்னர் உயரதிகாரிகளால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனபோதும் குல்வீந்தரின் நடவடிக்கைக்கு பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் ஆதரவு அதிகரித்து வருகிறது.
இதனூடே பாஜவின் என்டிஏ கூட்டணியில் முன்னர் இடம்பெற்றிருந்த சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், கங்கனா ரனாவத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். “இனியாவது கங்கனா ரனாவத் தனது பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்” என்று அவர் கண்டித்துள்ளார்.