காஞ்சிபுரத்தில் குரூப் 4 தேர்வு எழுத ஒரு நிமிடம் தாமதமாக வந்த மாணவர்கள் விரட்டியடிப்பு

காஞ்சிபுரத்தில், குரூப் 4 தேர்வு மையம் ஒன்றுக்கு, ஒரு நிமிடம் தாமதமாக வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால், தேர்வு நடத்தும் அலுவலர்களிடம் தங்களை தேர்வு எழுத அனுமதிக்க ஏற்பாடு செய்யுமாறு, வேண்டுகோள் வைத்த இளைஞர்களை போலீஸார் விரட்டி அடித்தனர்.

காஞ்சிபுரம் பிலாபாங் பள்ளி தேர்வு மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வு 9.30 மணியில் இருந்து 12.30 மணிவரை நடைபெறும் என்று தேர்வுக் கூட நுழைவுச் சீட்டில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அந்த நுழைவுச் சீட்டுடன் இணைந்த 2-ம் பக்கத்தில் 8.30 மணிக்கே மாணவர்கள் தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும். அவர்கள் 9 மணிவரை மட்டுமே அனுமதிக்கபதற்கான சலுகை நேரம் வழங்கப்படும் என்று விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பலர் முதல் பக்கத்தை மட்டுமே பிரிண்ட் எடுத்ததால் 2-ம் பக்கத்தில் இருந்த இந்த விதிமுறைகள் தெரியவில்லை.

இந்நிலையில் இத்தேர்வு மையத்துக்கு 9 மணிக்கு மேல் சுமார் 20 இளைஞர்கள் வந்தனர். 9 மணிக்கே தேர்வு மையத்தின் கதவுகள் பூட்டப்பட்டதால் 9.01-ல் இருந்தே வந்தவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் வெளியில் காத்திருந்த இளைஞர்கள் 9.30 மணிக்குத் தானே தேர்வு நேரம் என்று காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர்.

அவர்கள் தேர்வு நடத்தும் அலுவலரையாவது சந்திக்க விடுங்கள் எங்களை தேர்வு எழுத அனுமதிக்கும்படி கேட்டுப் பார்க்கிறோம் என்று அமைதியான முறையில் வேண்டுகோள் வைத்தனர். அப்போது பள்ளியின் உள்ளிருந்த வந்த ஒருவர் 9 மணிக்கு மேல் வந்த யாரையும் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்றார். ஓராண்டாக படித்துள்ள தங்களை, தேர்வு நடத்தும் அலுவலரையாவது சந்திக்க அனுமதிக்க கோரினர். கர்ப்பிணிகள் கூட தேர்வெழுத வந்து காத்துள்ளதாக, அங்கிருந்த காவலர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது ரோந்து வாகனத்தில் வந்த போலீஸார் திடீரென உள்ளே நுழைந்தனர். காவலர் ஒருவர், தேர்வுக்கே தாமதமாக வந்த, நீங்கள் அரசு ஊழியர்களாகி என்ன செய்யப்போகிறீர்கள்? நேரம் முடிந்துவிட்டது. அனைவரும் வெளியே செல்லுங்கள் என்று மிரட்டும் தொனியில் கூறினார். இதனால், கோபமடைந்த தேர்வர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த போலீஸார், தேர்வர்களை லத்தியைக் காட்டி, அங்கிருந்து விரட்டி அடித்தனர். இதையடுத்து, தேர்வெழுத வந்த பெண்கள் உள்ளிட்ட பலரும் கண்ணீருடன் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

தேர்வுக் கூட நுழைவுச் சீட்டின் முதல் பக்கத்திலேயே தேர்வு நேரம் குறிப்பிட்டுள்ள இடத்துக்கு கீழ் ஒரு மணி நேரம் முன்னதாக தேர்வு மையத்துக்கு வர வேண்டும் என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும். தேர்வு நேரத்தை ஒரு இடத்திலும், தேர்வு எழுத மையத்துக்கு வர வேண்டிய நேர அட்டவணையை அடுத்த பக்கத்திலும் அச்சிடப்பட்டிருந்ததாலேயே, இந்த குழப்பம் ஏற்பட்டதாக, தேர்வெழுத வந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.