நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து ஒற்றுமையாகவும் ஒன்றாகவும் செயல்படுவோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நீட்டிக்கப்பட்ட செயற்குழுக் கூட்டம் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், அம்பிகா சோனி, பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, “தேர்தலை முன்னிட்டு கடந்த சில மாதங்களாக அயராது உழைத்த காங்கிரஸ் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் காங்கிரஸ் செயற்குழு நன்றி தெரிவிக்கிறது. நம் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியதன் மூலம், சர்வாதிகார சக்திகளுக்கும், அரசியலமைப்பு விரோத சக்திகளுக்கும் பொதுமக்கள் வலுவான பதிலடி கொடுத்துள்ளனர். பாஜகவின் 10 ஆண்டுகால பிரிவினை, வெறுப்பு அரசியலை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர்.
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸின் அனைத்து உறுப்பினர்களையும் காங்கிரஸ் செயற்குழு வாழ்த்துகிறது. தனது நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் நம் அனைவரையும் வழிநடத்திய சோனியா காந்திக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியலமைப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, வேலையில்லாத் திண்டாட்டம், சமூக நீதி மற்றும் நல்லிணக்கம் போன்ற பிரச்சினைகளை மக்கள் பிரச்சினைகளாக மாற்றிய மக்களின் விருப்பமான ராகுல் காந்திக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராகுல் காந்தி மேற்கொண்ட 4,000 கிமீ இந்திய ஒற்றுமை யாத்திரை மற்றும் 6,600 கிமீ இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் பலன்தான் கட்சிக்குக் கிடைடத்திருக்கும் வெற்றி.
அமேதி, ரேபரேலி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் செய்த பிரியங்கா காந்திக்கு வாழ்த்துகள். ஒரு அணி போல் பணியாற்றிய மூத்த காங்கிரஸ் சகாக்கள் அனைவருக்கும் நன்றி. நமது கூட்டு முயற்சியின் பலனாக நாடு முழுவதும் உள்ள நமது சக ஊழியர்கள் புதிய ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பணியாற்றினார்கள். கடின உழைப்பும் உறுதியும் இருந்தால் மிகப்பெரிய எதிரிகளையும் வீழ்த்த முடியும் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்திய ஒற்றுமை யாத்திரை மற்றும் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை எங்கெல்லாம் சென்றதோ அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதமும் இடங்களும் அதிகரித்துள்ளன. நியாய யாத்திரை தொடங்கிய மணிப்பூரில் இரு இடங்களிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.
நாகாலாந்து, அசாம், மேகாலயா போன்ற பல வடகிழக்கு மாநிலங்களிலும் நமக்கு இடங்கள் கிடைத்துள்ளன. மகாராஷ்டிராவில் நாம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளோம். ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்றுவதற்காக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
இது மட்டுமின்றி, எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் கிராமப்புறங்களில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் நமக்கான செல்வாக்கை உருவாக்கி, இப்பகுதிகளிலும் கட்சியை பலப்படுத்த நாம் இன்னும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த தருணத்தில், இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளைப் பாராட்ட விரும்புகிறேன். வெவ்வேறு மாநிலங்களில் உள்ள அனைத்து கூட்டணி கட்சிகளும் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து ஒற்றுமையாகவும் ஒன்றாகவும் செயல்படுவோம்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் எழுப்பிய பிரச்சினைகள் பொது மக்களின் கவலைக்குரிய பிரச்சினைகள். அவை எப்போதும் நம் கவனத்தில் இருக்கும். நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் பொதுமக்களின் இந்தக் கேள்விகளை தொடர்ந்து எழுப்புவோம்.
தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை காங்கிரஸ் பணிவுடன் ஏற்கிறது. நாட்டின் பெரும் பகுதி மக்கள் நம்மை நம்பியுள்ளனர். அவர்களின் நம்பிக்கையை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். நாம் ஒழுக்கமாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமது பணி தொடரும். 24 மணி நேரமும், 365 நாட்களும், மக்கள் பிரச்சினைகளை எழுப்பி மக்கள் மத்தியில் நாம் இருக்க வேண்டும்” என மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.