கூடலூரில் தேவர்சோலையை அடுத்த பொன்வயல் கிராமத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை 4 நாட்களுக்குப் பிறகு இன்று கூண்டில் சிக்கியது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம் தேவர்சோலையை அடுத்த பொன்வயல் கிராமத்தில், கடந்த 4 ஆம் தேதி சுனில் என்பவர் வீட்டின் அருகே சிறுத்தை ஒன்று பதுங்கி இருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுத்தை நடமாட்டம் உள்ள பொன்வயல், பாலம்வயல் உட்பட்ட பகுதிகளில், வன ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கவச உடைய அணிந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள தேயிலை, காபி தோட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியானது. சிறுத்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது வயது முதிர்வு காரணமாக அது பதுங்கி இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து மனிதர்களை தாக்கும் முன்பாக, அந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். கூண்டில் சிக்காதபட்சத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் முடிவு செய்தனர். ஆனால் சிறுத்தை, தேவன்-2 பகுதியில் தேயிலைத் தோட்டத்துக்குள் பதுங்கி இருந்தது. இதைத் தொடர்ந்து இரும்புக் கூண்டுகள் மற்றும் தானியங்கி கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் அந்த சிறுத்தையைக் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலையில் வனத்துறையினர் வைத்திருந்த இரும்புக் கூண்டுக்குள் சிறுத்தை புலி சிக்கியது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினருடன் விரைந்து சென்று சிறுத்தையை முதுமலைக்கு கொண்டு சென்றனர். சிறுத்தை சிக்கியதை அடுத்து கூடலூர் சுற்றுவட்டார கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.