விழுப்புரத்தில் இருந்து 10 கிலோ கஞ்சாவுடன் நெல்லை செல்ல முயன்ற 2 இளைஞர்கள் கைது

விழுப்புரத்தில் இருந்து நெல்லைக்கு 10 கிலோ கஞ்சாவுடன் பயணிக்கவிருந்த இரண்டு இளைஞர்களை விழுப்புரம் போலீஸார் இன்று காலையில் கைது செய்தனர்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீஸார் இன்று காலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக 2 இளைஞர்கள் சுற்றி வந்தனர். அவர்களை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, பையில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்களில் ஒருவர் திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே நஞ்சைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா சுந்தர பாண்டி (27) என்பதும், மற்றொருவர் தூத்துக்குடி மாவட்டம், அக்கநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் (28) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து தென்மாவட்டத்துக்கு கஞ்சாவை கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீஸார், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.