தமிழகத்தில் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட புதிய எம்பி-க்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கைப்பற்றியது.
இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள், திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு ஜூன் 4-ம் தேதி இரவே நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பி-க்களை முதல்வர் சந்தித்தார். அப்போது முதல்வருக்கு எம்பி-க்களும் கூட்டணிக் கட்சி தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். எம்பி-க்களுக்கு முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிலையில், திமுக எம்பி-க்கள் கூட்டம் நாளை மாலை 6.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட புதிய எம்பி-க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்கும்படி அறிவுறுத்தியுள்ளார். இக்கூட்டத்தில், மக்களவையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் மக்களவை உறுப்பினர்கள் பணிகள் குறித்தும் அறிவுறுத்தல்களை முதல்வர் வழங்குவார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.