தமிழகத்தில் பாஜகவுக்கு விழுந்தவை பாஜகவின் வாக்குகள் அல்ல; அவை கூட்டணி கட்சிகளின் வாக்குகள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் நாடு முழுவதும் அரசியல் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று வாகை சூடியுள்ளது. தேர்தல் முடிவுகளின் படி, திமுக 26.93 சதவீதம் வாக்குகளும், அதிமுக 20.46 சதவீத வாக்குகளும், பாஜக 11.24 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.
இந்நிலையில் திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜகவுக்கு வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளதை குறிப்பிட்டு அக்கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இச்சூழலில், தமிழகத்தில் பாஜகவுக்கு விழுந்தவை பாஜகவின் வாக்குகள் அல்ல; அவை கூட்டணி கட்சிகளின் வாக்குகள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுதொடர்பாக கூறியதாவது: “பாஜக தனித்துப் போட்டியிட்டு இத்தகைய வாக்கு சதவீதத்தை பெற்றிருந்தால் அவர்கள் சொல்வதில் ஒரு பொருள் இருக்கிறது. ஆனால் பாமக உள்ளிட்ட இதர கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அவர்கள் போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த வாக்குகளை பெற்றுள்ளனர்.
இவையெல்லாம் தற்காலிகமானவை. இது பாஜகவுக்கே உரித்தான வாக்கு வங்கி அல்ல. சிதம்பரம் தொகுதியில் பாஜக ஒன்றரை லட்சத்துக்கும் மேல் வாக்குகளை பெற்றிருக்கிறது. ஆனால் டெபாசிட் இழந்துள்ளது. அந்த வாக்குகள் பாஜக வாக்குகள் அல்ல. அவை பாமகவின் வாக்குகள். ஆகவே அது எப்படி பாஜக வாக்கு வங்கி கணக்கில் சேரும்?” என்று திருமாவளவன் கூறினார்.