சென்னை மாநகர பேருந்துகளின் பக்கவாட்டில் தடுப்பு கம்பிகள் : டூவீலர் விபத்துகளை தடுக்க நடவடிக்கை

இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதைத் தடுக்கும் வகையில் 1,315 பேருந்துகளின் கீழ் இரு புற பக்கவாட்டிலும் தடுப்பு கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு பேருந்தும் நாள்தோறும் 265 முதல் 270 கிமீ பயணிக்கிறது. இவற்றில் நாள்தோறும் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர். இந்த பேருந்துகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க போதிய நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, முன்னெச்சரிக்கையுடன் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குதல், அவர்களுக்கு பயிற்சி வழங்குதல் போன்றவற்றை செய்து வரும் வேளையில், அருகில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி பேருந்து சக்கரங்களில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில் பேருந்துகளுக்கு இரு புறமும் கீழ் பக்கவாட்டில் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணிகளை மாநகர போக்குவரத்துக் கழகம் முன்னெடுத்து வருகிறது. அதன்படி, தற்போது 1,315 பேருந்துகளில் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: “பேருந்து சக்கரங்களுக்கு இடையே விபத்து தடுப்பு கம்பிகளை அமைப்பதன் மூலம் மாநகர பேருந்துகளின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி வருகிறோம். இந்த நடவடிக்கையால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறோம். இரு சக்கர வாகன ஓட்டிகள் பேருந்தை முந்திச் செல்லும் போதோ, அல்லது எதிர்பாரா நேரங்களிலோ யாரும் பேருந்துக்கு அடியில் விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக 2212 பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் முதல்கட்டமாக 600 பேருந்துகளிலும், இரண்டாவது கட்டத்தில் 715 பேருந்துகளிலும் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பே எங்களது முதன்மை குறிக்கோள். அனைவருக்கும் பாதுகாப்பான சென்னை சாலைகள் என்ற அடிப்படையில் இது போன்ற ஏற்பாடுகளை செய்து வருகிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.