நாம் தமிழருக்கு மறுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தில் விழுந்த 79 ஆயிரம் வாக்குகள்

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வழங்க மறுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 79 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. இந்த முறை அவர்களது விருப்ப சின்னமான கரும்பு விவசாயிகள் மறுக்கப்பட்டதால், மைக் சின்னத்தில் களம் இறங்கியது நாதக. கரும்பு விவசாயிகள் சின்னமானது வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும், வேறு சில சுயேச்சை வேட்பாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டது. போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தோல்வி அடைந்திருந்தாலும், 8.16 வாக்கு சதவீத வாக்குகளுடன் மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்று கவனம் ஈர்த்துள்ளது.

அதே சமயம் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர்கள் வேலூர், திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய 5 இடங்களிலும்,13 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். முடிவில் மொத்தமாக கரும்பு விவசாயிகள் சின்னத்துக்கு 79,203 வாக்குகள் விழுந்துள்ளன. குறிப்பாக, 7 தொகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன.

அதிகபட்சமாக திருப்பூர் தொகுதியில் கரும்பு விவசாயி சின்னத்தில் நின்ற சுயேச்சை வேட்பாளருக்கு 7,125 வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த முடிவுகளைப் பார்த்து விட்டு, தங்களுக்குக் கிடைக்க வேண்டிய 79 ஆயிரம் வாக்குகள் சின்னம் பிரச்சினையால் இப்படி வழிமாறிப் போய்விட்டதாக நாம் தமிழர் கட்சியினர் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.