பாராமுல்லா தொகுதியில் ஒமர் அப்துல்லாவை வீழ்த்திய சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட வழக்கு சிறைக் கைதி ரஷீத்

சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA) கைதாகி 2019-ஆம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கும் எஞ்சினியர் ரஷீத், ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், பாராமுல்லா தொகுதியில் தனது தோல்வியை ஏற்பதாக முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாரமுல்லா தொகுதியில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார் எஞ்சினியர் ரஷீத் என்று அழைக்கப்படும் அப்துல் ரஷித் ஷே.

அதிகாரபூர்வமான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேசிய மாநாட்டுத் தலைவர் அப்துல்லா தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். எஞ்சினியர் ரஷீத் என அழைக்கப்படும் அப்துல் ரஷீத், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA) சட்டத்தில் கைதாகி 2019-ம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார். ரஷீத் வெற்றி பெற்றது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அவர் தேர்தலில் சுயேச்சையாக தான் போட்டியிட்டார். அவர் சிறையில் இருந்ததால், அவரது இரண்டு மகன்களும் சில வாரங்களுக்கு முன்புதான் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். இவர், வடக்கு காஷ்மீரில் உள்ள லாங்கேட் தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தனது எக்ஸ் தளத்தில், “தவிர்க்க முடியாத ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். வடக்கு காஷ்மீரில் வெற்றி பெற்ற எஞ்சினியர் ரஷீத்துக்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.