விருதுநகர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கினர். அதைத்தொடர்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துவரப்பட்டு காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், காலை 10.30 மணி வரை முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதோடு, வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செய்தி சேகரிக்கவும் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து, வாக்கு எண்னிக்கை மையத்துக்குள் சென்று செய்தி சேகரிக்க அனுமதியளிக்கக் கோரியும், பத்திரிகையாளர்களைத் தடுக்கும் போலீஸாரைக் கண்டித்தும் பத்திரிகையாளர்கள் 25-க்கும் மேற்பட்டோர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு, போலீஸாரைக் கண்டித்தும், தகவல்களை விரைவாக வெளியிடுமாறும் அவர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் போலீஸ் பாதுகாப்புடன் அணியணியாக பத்திரிகையாளர்கள் சென்றுவர அனுமதியளித்தார். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு பத்திரிகையாளர்கள் கலைந்தனர்.