கடந்த 10 ஆண்டு கால நரேந்திர மோடி அரசின் நாசகர ஆட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. பாஜகவின் அதிகார பலம், தில்லு முல்லுகள், பண பலம், வெறுப்பு பேச்சுகள் இவைகளை முறியடித்து பாஜகவின் தனித்த ஆட்சிக்கு வாக்காளர்கள் முடிவு கட்டியுள்ளனர். பாஜகவின் கோட்டையாகக் கருதப்பட்ட உத்தரப் பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பாஜக படு தோல்வியடைந்துள்ளது. திட்டமிட்டு திணிக்கப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வாக்காளர்கள் தவிடுபொடியாக்கியுள்ளார்கள். மோடியின் (சார் சோ பார்) 400+ என்ற முழக்கம் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் மதவெறி சக்திகளின் பண பலம், அதிகார பலம் தேர்தல் வரம்பு மீறல்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கி இந்தியா அணி வரலாறு காணாத சாதனை படைத்துள்ளது. நரேந்திர மோடி எத்தனை முறை படையெடுத்தாலும் தமிழகத்துல் பாஜக காலூன்ற முடியாது என்பதை தமிழக வாக்காளப் பெருமக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்கள். இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நெஞ்சார்ந்த நன்றியினையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
இக்கூட்டணியின் வெற்றிக்காக மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பணியாற்றி, பரப்புரையும் மேற்கொண்ட திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கும், கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் மிகுந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. இத்தேர்தலில் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களை அமோகமாக வெற்றி பெறச் செய்திட்ட வாக்காளப் பெருமக்களுக்கும், இவர்களது வெற்றிக்கு அயராது உழைத்திட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், ஊழியர்களுக்கும் மற்றும் தேர்தல் பணியாற்றிய மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய, மாநில தலைவர்களின் தேர்தல் பரப்புரை செய்திகளை மக்களுக்கு வெளியிட்டு உதவிய ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக கூட்டணி 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அனைத்து ஊடகங்களும் தெரிவித்தன. ஆனால், அக்கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல, பாஜகவிற்கு செல்வாக்குள்ள உத்திரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்டு பல மாநிலங்களில் பெரும் சரிவை அக்கட்சி சந்தித்துள்ளது. கடந்த 10 ஆண்டு கால நரேந்திர மோடி அரசின் நாசகர ஆட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் மத வெறி சக்திகளை எதிர்த்தும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், ஜனநாயக உரிமைகளைப் பேணிக் காக்கவும், அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் இணைந்து பணியாற்றும். அதில் மார்க்சிஸ்ட் கட்சி முழுமையான பங்கினை ஆற்றும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” என பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.