தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றது : தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றதாகவும், புகார் எதுவும் வரவில்லை என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ சற்றுமுன்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மின்னணு இயந்திரத்தில் கோளாறு இருந்தால் அந்த இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண முயற்சி எடுப்பார்கள். இல்லாவிட்டால் அந்த இயந்திரங்கள், ஒதுக்கி வைக்கப்பட்டு, அடுத்தடுத்த சுற்று எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறும். இறுதியில் வாக்கு வித்தியாசம் குறைவாக இருக்கும் பட்சத்தில், தேவைப்பட்டால் அந்தக் கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட விவிபாட் பதிவுகள் எண்ணப்படும்.

தபால் வாக்கு பிரச்சினை ஏதும் இருந்தால் அதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது தேர்தல் பார்வையாளர்கள் தான் முடிவெடுப்பார்கள். தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான எந்தவித புகார்களும் அரசியல் கட்சிகளால் தரப்படவில்லை. தேர்தல் ஆணையத்தால் தேர்தல் முடிவுகள், ஒவ்வொரு சுற்றிலும் தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இறுதி செய்யப்பட்ட விவரங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தேர்தல் நடைமுறைகள் முடிந்த பின் முடிவு விவரங்களை, தலைமை தேர்தல் ஆணையர் குடியரசுத் தலைவரிடம் அளிப்பார். தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6-ம் தேதி வரை அமலில் இருக்கும்” என்றார்.