சிக்கிமில் பிரேம் சிங் தமாங் கவர்னருடன் சந்திப்பு : ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

முதலமைச்சர் தமாங் கவர்னர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யாவை இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 2-ந்தேதி எண்ணப்பட்டன. மொத்தம் உள்ள 32 இடங்களில், முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 31 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு (எஸ்டிஎப்) ஒரு இடம் தான் கிடைத்துள்ளது. மற்ற கட்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் கட்சியின் சட்டபேரவை தலைவராகவும், முதலமைச்சராகவும் தமாங் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலமைச்சர் தமாங் கவர்னர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். ஆனால், புதிய அரசு அமையும் வரை பதவியில் நீடிக்குமாறு தமாங்கிடம் கவர்னர் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் முதலமைச்சர் தமாங் கவர்னர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யாவை கவர்னர் மாளிகையில் இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்த முன்மொழிவை கவர்னர் ஏற்றுக்கொண்டார். புதிய அரசின் மீது நம்பிக்கை இருப்பதாக தெரிவித்த கவர்னர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, பிரேம் சிங் தலைமையிலான அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்காகவும் முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று முழு நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.