நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான மரணத்திற்கு முன்பாக அவர் வாங்கிய மற்றும் விற்பனை செய்த சொத்துக்கள் தொடர்பாக ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா? என்பது குறித்து திசையன்விளை, ராதாபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த மே 2ம் தேதி மாயமான நிலையில் 4ம் தேதி கரைச்சுத்துபுதூரில் அவரது வீட்டிற்கு அருகேயுள்ள தோட்டத்தில் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. அவர் எழுதிய மரண வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியது. 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வந்த நிலையில் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதில் கடந்த 10 நாட்களாக சிபிசிஐடி அதிகாரிகள் நேரடி கள விசாரணை மற்றும் அலுவலக விசாரணை என இரு குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தொழில் அதிபர்கள், உறவினர்கள், நெருக்கமானவர்கள், அரசியல் பிரமுகர்களான தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னாள் ஒன்றிய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டவர்கள், ஜெயக்குமாரின் உறவினரான டாக்டர் செல்வகுமார் உள்ளிட்ட 32 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் சம்பவம் நடந்த நாள் மற்றும் அதற்கு முன்னர் திசையன்விளையிலுள்ள விடுதிகளில் தங்கிச் சென்றவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பாக கடைசி 3 நாட்கள் அவருடன் அதிக நேரம் இருந்தவர்கள், அவரது செல்போனில் அதிக நேரம் பேசியவர்களிடமும் விசாரணை நடத்தி அதனை வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர். மேலும் மூன்று ஆண்டுகளாக அவரது வங்கி கணக்குகளிலுள்ள வரவு, செலவு கணக்குகள் தொடர்பாக வங்கி அதிகாரிகள் மற்றும் வங்கி ஊழியர்களிடமும் கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயக்குமார் மரணத்திற்கு முன்பாக வாங்கிய சொத்துக்களும், விற்பனை செய்த சொத்துக்களும் தொடர்பாக ஏதேனும் பிரச்சனை உள்ளதா? என்பது குறித்து திசையன்விளை, ராதாபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். இந்த விசாரணை இன்றும் (4ம் தேதி) நடக்கவுள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.
சொத்துக்கள் மகன், மகள் பெயருக்கு மாற்றம்: காங்.,தலைவர் ஜெயக்குமார் மரணம் அடைவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவரது சொத்துக்களில் சிலவற்றை (சிறிய அளவிலான) மகள் மற்றும் இரண்டு மகன்கள் ஆகியோர் பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் இரவில் ஜெயக்குமார் கூகுள் பே மூலம் மகள் கேத்ரினுக்கு ரூ.10 ஆயிரமும், இரண்டாவது மகன் ஜோ மார்டினுக்கு ரூ.15 ஆயிரமும் அனுப்பி வைத்துள்ள விவரம் தெரிய வந்தது.