“தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்” என்று திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
நெல்லை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகிறது நெல்லை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, நாம் தமிழர் சார்பில் சத்தியா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் நெல்லை தொகுதியில் ஆறு சுற்று முடிவுகள் வெளியான நிலையில் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலை வகித்து வருகிறார். அவர் தனக்கு அடுத்து வரும் நயினார் நாகேந்திரனை விட சுமார் 30,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறார். எனவே அவருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “இதுவரை வெளியான முடிவில் ராபர்ட் புரூஸ் முன்னிலையில் உள்ளார். இனியும் முடிவுகள் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. பொதுமக்களின் முடிவு எதுவாக இருந்தாலும் அதை வரவேற்கிறேன் மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்” என்று கூறினார்.