சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்ட வழக்கில் அரசு இன்னும் பதிலளிக்காதது ஏன்? – ஐகோர்ட் கேள்வி

சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு இன்னும் ஏன் பதிலளிக்கவில்லை? என மூன்றாவது நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக யூடியூபரான சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த மே 12 அன்று அவரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா தொடர்ந்திருந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது உத்தரவில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச்சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிபதி பி.பி.பாலாஜி, இந்த வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக ஜி.ஜெயச்சந்திரனை நியமித்து பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி, இந்த வழக்கில் பதிலளிக்க காலஅவகாசம் அளிக்க வேண்டும், எனக் கோரினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்த வழக்கில் ஏற்கெனவே இரு நீதிபதிகளும் உத்தரவு பிறப்பித்து 15 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் ஏன் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கவில்லை? என கேள்வி எழுப்பி விசாரணையை வரும் ஜூன் 6-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.