“கோவையில் தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்வோம்” – கணபதி ராஜ்குமார் உறுதி

கோவையில் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகள் செய்து தரப்படும் என, வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கூறியுள்ளார்.

கோவை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவை தொகுதியில் வெற்றி என்பது நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். முதல்வர் ஸ்டாலின் அமல்படுத்திய திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் ஜிஎஸ்டி வரி வசூலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மக்கள் வழங்கிய தீர்ப்பாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. தமிழக முதல்வர் விடிவை ஏற்படுத்தி கொடுப்பார் என மக்கள் நம்புகின்றனர். சென்னைக்கு அடுத்து கோவை போன்ற தொழில் நகரம் தனித்தன்மை இழந்து வரும் நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப தேர்தல் முடிவுகள் வழிவகுக்கும்.

கோவை தொகுதியில் பாஜக பெற்ற வாக்குகள் அந்த கட்சியின் வளர்ச்சியை வெளிப்படுத்துவதை விட அதிமுகவின் செயல்பாட்டை பிரதிபளிப்பதாக அமைந்துள்ளது. கோவை தொழில் மேம்பாட்டுக்கும் விமான, ரயில் நிலையங்களை மேம்படுத்தவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என கூறினார்.