உளுந்தூர்பேட்டை அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான பீட்டர் பிரான்ஸிஸ் என்பவர் நவீன் என்பவருடன் சென்னை சென்று விட்டு பின்னர் மீண்டும் தஞ்சாவூரில் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் சென்ற சொகுசு காரை ஓட்டுநர் சிவகுமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது சென்னையில் இருந்து பாடி கட்டுவதற்காக கேரளா சென்ற லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த கார், லாரியின் பின்புறமாக அதிவேகத்தில் மோதியது. இதில் சொகுசு கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஓட்டுநர் சிவகுமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பீட்டர் மற்றும் நவீன் ஆகியோர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே இந்த விபத்து காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியாக சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்லும் நிலை உருவானது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.