புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துபட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட, சென்னையில் விசாலாட்சி சிட்பண்ட் மற்றும் விசாலாட்சி பேப்பர் மார்ட் நிறுவனங்களை நடத்திவரும் வள்ளல் பெருந்தகை முத்துராமன், வள்ளலார் இல்ல மாணவர்பால் கொண்ட கருணையாலும், அன்பாலும்,தனது துணைவியார் மீனாட்சி அம்மையாரின் நினைவாக வழங்கும் முழு நிதி உதவியில் (ரூ.12 லட்சம்) இந்த ஆழ்துளாய் கிணறு அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கான பூமி பூஜை நிகழ்வு வள்ளலார் மாணவர் இல்ல தலைவர் மருத்துவர் ச. ராம்தாஸ் தலைமையில் நடைபெற்றது. வள்ளலார் வழிபாட்டு முறைப்படி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை வள்ளல் பெருந்தகை அ.முத்துராமன் தொடங்கி வைத்தார். மேலும் சன்மார்க்க அன்பர்கள், புதுக்கோட்டை சன்மார்க்க சங்க தலைவர் காத்தமுத்துசுவாமிகள், ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி தமிழாசிரியர் கு.ம. திருப்பதி, அ.லெ.சொக்கலிங்கம், மருதூர் சதாசிவம், பேரா.சா.விஸ்வநாதன், ஆசிரியர் திருநாவுக்கரசு, மாணவர் இல்லப் பொறுப்பாளர் ரகுபதி மற்றும் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்வின் நிறைவாக ஞானாலயா பா கிருஷ்ணமூர்த்தி, வள்ளலார் பெறுமைகளைப் பற்றிப்பேசியதோடு, வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு, அவரது உபதேசங்கள் யாவற்றையும் சிறு நூலாக்கி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும், வள்ளலார் விரும்பிய எல்லோருக்கும் உணவு கிடைத்துவிட்டது, பசிப்பினி போய்விட்டது ஆனால் அறிவுப் பசி இன்னும் இருக்கிறது. அதை போக்குவது நம் கடமை என்றும் கேட்டுக் கொண்டார்.