சமூகத்தை பிளவுபடுத்தும் வாக்கு வங்கி அரசியலையே காங்கிரஸ் விரும்புகிறது : ஜே.பி.நட்டா தாக்கு

சமூகத்தை பிளவுபடுத்தும் வாக்கு வங்கி அரசியலையே காங்கிரஸ் விரும்புவதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

7வது மற்றும் இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தனது மனைவியுடன் இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் இன்று காலை வாக்களித்தார். இந்நிலையில் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஜே.பி.நட்டா அளித்த பேட்டியில் கூறியதாவது: “நாட்டை வலிமையடையச் செய்யவும், தன்னிறைவு பெறச்செய்யவும் வாக்களித்தேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா முன்னேறியுள்ளது.

எனவே நாம் மட்டுமல்ல; கோடிக்கணக்கான மக்கள் இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் அரசியலையும், அரசியல்வாதிகளையும் கைவிட்டனர். தற்போது அந்த மக்கள் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்து முன்னேறி வருகின்றனர்.” என்றார்.

இதைத் தொடர்ந்து, பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை மாற்றும் என எதிர்க்கட்சிகள் கூறி வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜே.பி.நட்டா, “இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, 1976ல் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையையே மாற்றி, இப்போது வாக்காளர்களை பிளவுபடுத்தும் வகையில் பிரச்சினையை கிளப்ப முயன்றது காங்கிரஸ்.” என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “காங்கிரஸ் ஒருபோதும் நேர்மறையாக செயல்படாது. அவர்கள் ஒருபோதும் நாட்டுக்கு சாதகமான செய்தியை வழங்கவில்லை. அவர்கள் தடைகளை உருவாக்கும் சக்திகளுடன் வேலை செய்கிறார்கள். மேலும் சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சினைகளை எப்போதும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். நாட்டை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்லும் காரியம் காங்கிரஸுக்கு பிடிக்காது. சமூகத்தை பிளவுபடுத்தி வாக்கு வங்கி அரசியலை நடத்துவதையே காங்கிரஸ் விரும்புகிறது.” என்று ஜே.பி.நட்டா தெரிவித்தார்.