கோவை மாவட்டத்தில் எண்ணெய் வித்துப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மானியமாக ரூ.54 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் நெல், தானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு என சராசரியாக ஆண்டுக்கு 45,697 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் எண்ணெய் வித்துப் பயிர்களான நிலக்கடலை, எள், ஆமணக்கு ஆகியவை 4,327 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. நிலக்கடலையானது நமக்கு தேவையான புரதம், கார்போ ஹைட்டிரேட்ஸ், நல்ல கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புகள், நார்ச்சத்துகளை வழங்கவல்லது.
நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கவல்லது. தேவையான அமினோ அமிலங்களை உடலுக்கு அளிக்கிறது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த நிலக்கடலை சாகுபடியை ஊக்குவிக்க, தேசிய எண்ணெய் வித்துக்கள் இயக்கத்தின் கீழ் ரூ.54 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் எண்ணெய் வித்துக்கள் சாகுபடிக்கு மானியமாக வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கு.பெருமாள்சாமி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘எண்ணெய் வித்துக்கள் சாகுபடியை ஊக்குவிக்க பின்வருமாறு மானியம் வழங்கப்படுகிறது. அதாவது, சான்று பெற்ற குறுகிய கால ரகங்களை போன்ற நிலக்கடலை விதைகளை உற்பத்தி செய்து வழங்கும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு கிலோ விதைக்கும் ரூ.25 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
சான்று பெற்ற விதைகளை வேளாண்மை விற்பனை மையங்கள் மூலம் விவசாயிகள் வாங்கும் போது, நிலக்கடலைக்கு 50 சதவீதம் அல்லது ரூ.40-ம், எள் விதைகளுக்கு 50 சதவீதம் அல்லது ரூ.80-ம் மானியமாக வழங்கப்படுகிறது. நிலக்கடலை பயிரில் இரண்டரை ஏக்கர் பரப்பில் செயல்விளக்கம் திடல் அமைக்க 200 கிலோ நிலக்கடலை காய்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது. எள் சாகுபடியினை ஊக்குவிக்க இரண்டரை ஏக்கர் சாகுபடிக்கு ரூ.3 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
இதில் எள் விதைகள் 5 கிலோ கிராம், சூடோமோனாஸ்புளுரசென்ஸ் 3 கிலோ கிராம், திரவ உயிர் உரங்கள் 1.5 லிட்டர், திரவ அங்கக உரம் 1.5 லிட்டர் வழங்கப்படுகிறது. நிலக்கடலை பயிரில் மணிகள் முழுமையாக நிரம்ப, எண்ணெய் சதவீதம் அதிகரிக்க இரண்டரை ஏக்கருக்கு 400 கிலோ கிராம் ஜிப்சம் வழங்கப்படுகிறது. இதற்கு 50 சதவீதம் அல்லது ரூ.750 மானியமாக வழங்கப்படுகிறது.
நிலக்கடலை பயிருக்கு தேவையான நுண்ணூட்டச்சத்துகளை வழங்க இரண்டரை ஏக்கருக்கு 12.5 கிலோ கிராம் நுண்ணூட்டம் ரூ.500 மானியத்தில் வழங்கப்படுகிறது. நிலக்கடலையில் பூச்சி தாக்குதலை குறைக்கவும், நன்மை செய்யும் பூச்சிகளை அதிகரிக்கவும் ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு 4 கிலோ கிராம் உளுந்து மானியத்தில் வழங்கப்படுகிறது. நிலக்கடலை அறுவடையினை உரிய நேரத்தில் மேற்கொள்ள அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்தைய மானியமாக இரண்டரை ஏக்கருக்கு ரூ.2,500 வழங்கப்படுகிறது, என்று கூறப்பட்டுள்ளது.