கன்னியாகுமரியில் 3 நாள் தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் கடந்த 3 நாட்களாக (45 மணி நேரம்) மேற்கொண்டு வந்த தியானத்தை பிரதமர் மோடி நிறைவு செய்தார். தியானம் முடிந்து திருவள்ளுவர் சிலைக்கு தனி படகில் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்த திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தியானத்தை முடித்த பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்தார்.

கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி கடந்த 30-ம் தேதி மாலை வந்தார். பகவதியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிறகு, படகு மூலம் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம் சென்றார். அங்கு பகவதியம்மனின் ஸ்ரீபாதத்தை தரிசனம் செய்தார். பின்னர், விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார். நள்ளிரவில் தியான மண்டபம் அருகே உள்ள அறையில் சற்று ஓய்வெடுத்தார்.

நேற்று அதிகாலை 5 மணி அளவில் காவி உடை, நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் அணிந்து, வலது கையில் ருத்ராட்ச மாலையுடன் துறவிக் கோலத்தில் தியான அறையில் இருந்து பிரதமர் மோடி வெளியே வந்தார். ருத்ராட்ச மணிகளை உருட்டி, ஜெபம் செய்தபடியே விவேகானந்தர் பாறையை வலம் வந்தார். பின்னர், கிழக்கு நோக்கி கைகூப்பியபடி சூரிய உதய காட்சியை தரிசித்தார். அப்போது மேகங்கள் இல்லாததால் அதிகாலை சூரியன் செந்நிறத்தில் ரம்மியமாக காட்சியளித்தது. சூரிய ஒளியில் முக்கடல்களும் தங்கமாக ஜொலிப்பதை பிரதமர் ரசித்துப் பார்த்தார்.

மந்திரங்களை உச்சரித்தபடியே, தான் கொண்டு வந்த வெண்கலக் கெண்டியில் இருந்து கங்கை தீர்த்தத்தை சிறிது சிறிதாக கடலில் ஊற்றி, கங்கா வழிபாடு மற்றும் சூரிய உதயகால பூஜைகளை நடத்தினார். பின்னர், விவேகானந்தர் மண்டபம் சென்ற பிரதமர், விவேகானந்தர் சிலைமுன்பு தரையில் அமர்ந்து சுமார் அரைமணி நேரம் தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் தியான மண்டபம் சென்று தியானத்தை தொடர்ந்தார். அப்போது, அமைதியான சூழலில் ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம் ஒலித்துக் கொண்டிருந்தது. சுமார் 5 மணி நேரத்துக்கு ஒருமுறை தியானம் முடிந்து ஓய்வெடுக்க அறைக்கு வரும்போது, பிரதமரின் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

இந்நிலையில், மூன்றாம் நாளான இன்றும், பிரதமர் மோடி சூரிய உதய காட்சியை தரிசித்தார். பின்னர், தியானத்தை தொடர்ந்தார். பின்னர் 3 மணியளவில், தனது 45 மணி நேர தியானத்தை பிரதமர் மோடி நிறைவு செய்தார். பின்னர் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு சென்றார். அங்கு தமிழக நெடுஞ்சாலைத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத் துறை அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு மலர்செண்டு கொடுத்து வரவேற்றனர். பின்னர், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். மேலும், அங்குள்ள பணியாளர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர், அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு காரில் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

பிரதமர் மோடியின் தியானத்தை முன்னிட்டு, கன்னியாகுமரியில் வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகள் இன்றும் தொடர்ந்தன. கன்னியாகுமரி கடலில் 3 நாட்டிக்கல் மைல் தூரம் வரை மீன்பிடிபடகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், கன்னியாகுமரி பகுதியில்மட்டும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆதார் அட்டை இருக்கும் சுற்றுலா பயணிகள் மட்டும் விவேகானந்தர் பாறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால், பிரதமர் தியானம் செய்யும் தியான மண்டபம் பகுதிக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை.