அப்போலோ மருத்துவனைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் : வைகோவிடம் நலம் விசாரிப்பு

அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இன்று முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கட்சி நிர்வாகியின் மகள் திருமணத்துக்குச் செல்வதற்காக கடந்த 25-ம் தேதி நெல்லையில் தனது சகோதரர் வீட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தங்கியிருந்தார். அங்கு கால் இடறி விழுந்ததில் வைகோவுக்கு இடது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை திரும்பிய அவர், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது இடது தோளில் மூன்று இடத்தில் எலும்புகள் உடைந்திருந்தன. அதை சரி செய்ய கடந்த 29-ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டது. நாற்பது நாட்கள் ஓய்வுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தோள்பட்டை சரியாகி இயல்பு நிலைக்கு வந்துவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, அவரது உடல்நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தொலைபேசி வாயிலாக விசாரித்தனர். அவர் நலம் பெற வேண்டும் என தங்களது விருப்பத்தை அறிக்கை வாயிலாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். அங்கு அவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.