புனே கார் விபத்து தொடர்பான ரத்த மாதிரியை மாற்றிய புகாரில் சிறுவனின் தாய் கைது

புனேவில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் சிறுவனின் தாயார் ஷிவானி அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டார். போலீஸார் அவரைத் தேடிவந்த நிலையில் மும்பையில் இருந்து நள்ளிரவு வீடு திரும்பிய அவரை போலீஸார் கைது செய்தனர்.

முன்னதாக ரத்தப் பரிசோதனைக்கு சிறுவனின் ரத்த மாதிரிக்குப் பதிலாக தனது ரத்த மாதிரியை ஷிவானி கொடுத்திருந்தது அம்பலமானது. இதன் பேரில் ஷிவானி மீது போலீஸார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் கல்யாணி நகர் பகுதியில் கடந்த 19-ம் தேதி 17 வயதுடைய சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில் ஐ.டி. ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர். சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் இந்த காரை சிறுவன் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.

இந்த வழக்கில் சிறுவனை கைது செய்த போலீஸார் அவரை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கியது சர்ச்சையானது. இதையடுத்து அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, சிறார்கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து சிறுவனுக்கு கார் வழங்கிய அவரது தந்தையும் கட்டுமான தொழிலதிபருமான விஷால் அகர்வால், சிறுவனுக்கு மது வழங்கியதாக மதுபானக் கூட உரிமையாளர் மற்றும் 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் சிறுவனுக்கு பதிலாக குடும்ப டிரைவரை சிக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சிறுவனின் தாத்தாவையும் போலீ ஸார் கைது செய்தனர்.

அதுமட்டுமல்லாமல், மருத்துவமனையில் சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றியதாக சசூன் பகுதி அரசு மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவர் அஜய் தவாரே, முதன்மை மருத்துவ அதிகாரி ஹரி ஹல்னார், மருத்துவமனை கடைநிலை ஊழியர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ரத்தப் பரிசோதனை அறிக்கையை மாற்றுவது தொடர்பாக சிறுவனின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.