பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாள் காவலில் விசாரிக்க எஸ்டிஐ-க்கு அனுமதி

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாள் காவலில் விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்ஐடி) பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

முன்னதாக, பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பினார். பெங்களூரு விமான நிலையத்தில் அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கிட்டத்தட்ட 12 மணி நேரம் அவரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன்பின் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். தொடர்ந்து அவர் மக்கள் பிரதிநிதிகள் வழக்குகளை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது சிறப்பு புலனாய்வு குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “பிரஜ்வல் ரேவண்ணாவால் அவரின் வீட்டு பணிப்பெண் உட்பட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்பதற்காக சிறப்பு பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பிச் சென்றார். இந்த வழக்கில் விசாரணைக்காக அவரை 14 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி தர வேண்டும்” என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாதாடினார்.

அதேநேரம், பிரஜ்வல் ரேவண்ணா சார்பாக வாதிட்ட வழக்கறிஞர், “இது முழுவதுமாக ஜோடிக்கப்பட்ட வழக்கு. பிரஜ்வல் மீது திட்டமிட்டு பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை. மேலும், புகார் அளித்த பெண்ணின் அங்க அடையாளங்கள் வீடியோவில் இல்லை. எனவே, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கூடாது” என்று கூறினார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு, பிரஜ்வல் ரேவண்ணாவை ஆறு நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரிடம் சிறையில் வைத்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தலாம் எனத் தெரிகிறது.

பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் இருவர் தலைமையில் 5 பெண் காவலர்கள் கொண்ட பிரத்யேக குழுவை சிறப்பு புலனாய்வுக் குழு அனுப்பிவைத்தது. பெண் ஐபிஎஸ் அதிகாரிகளான சுமன் டி பென்னேகர் மற்றும் சீமா லட்கர் தலைமையிலான மகளிர் காவலர்களே பெங்களூரு விமான நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தொடர்ந்து பெண் காவலர்கள் அடங்கிய குழுவே அவரை விசாரணைக்கும் அழைத்துச் சென்றது. பெண் காவலர்களை திட்டமிட்டே பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய அனுப்பியதாக சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

“பெண் அதிகாரிகளை பிரஜ்வலை கைது செய்ய அனுப்ப வேண்டும் என்பது ஒரு திட்டமிட்ட நிகழ்வு. ஏனென்றால், பிரஜ்வல் தனது அதிகாரத்தை பெண்களுக்கு எதிராக பயன்படுத்தினார். அதே பெண்களுக்கு அவரை கைது செய்ய அதிகாரம் உள்ளது என்ற செய்தியை உணர்த்துவதற்கும், பெண்கள் யாருக்கும் பயப்பட மாட்டார்கள் என்பதை சொல்வதற்கும் அவரை திட்டமிட்டே பெண் காவல் அதிகாரிகளை வைத்து கைது செய்தோம்” என்று சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.