சென்னையில் சிறுமிகள் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட விவகாரம் : வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

சிறுமிகள் மற்றும் மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல், அந்த மாணவிகளை அதிக பணம் பெற்று முதியவர்களுக்கு அனுப்பி வைத்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையில் கும்பல் ஒன்று ஏழ்மையை பயன்படுத்தி சிறுமிகள் மற்றும் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளி பணம் சம்பாதித்து வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, சென்னை பாலியல் தடுப்பு பிரிவு (2) போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ரகசிய தகவலின்படி கடந்த 17ம் தேதி வளசரவாக்கம், ஜெய்நகர், 2வது தெருவில் உள்ள வீடு ஒன்றை கண்காணித்தனர். அங்கு சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக பாலியல் முகவர் (புரோக்கர்) தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் சாலை பகுதியைச் சேர்ந்த நதியா (39), அதே பகுதி சுமதி (46), மாய ஒலி (29), தி.நகர் சவுத்போக் சாலை ராமச்சந்திரன் (42), வளசரவாக்கம் 2வது தெரு அசோக்குமார் (31), மேற்கு சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் ரோடு ரமணிதரன் (70) ஆகிய 6 பேர் மற்றும் ஒரு பெண் என 7 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 2 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

மேலும், தனிப்படை போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் இவ்வழக்கு தொடர்பாக தி.நகரில் ஓட்டல் மேலாளராக பணியாற்றிய தண்டபாணி (36) என்பவர் கடந்த 24ம் தேதி கைது செய்யப்பட்டார். இவர் பாலியல் தொழில் நடப்பதற்காக ஓட்டல்கள் மற்றும் சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்புகளை ஏற்பாடு செய்து கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் தொடர்ச்சியாக முகவர்களாக செயல்பட்டு வாடிக்கையாளர்களை அழைத்து வந்ததாக செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரைச் சேர்ந்த விஜயலட்சுமி (51) என்பவர் 9வது நபராக கைது செய்யப்பட்டார். பள்ளியில் படிக்கும் சிறுமிகளை குறிவைத்து பணத்தாசை காட்டி மூளைச்சலவை செய்து அவர்களை பாலியல் தொழிலில் தள்ளி, பின் அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி அந்தச் சிறுமிகளை தொடர்ந்து பாலியல் தொழில் ஈடுபடுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இப்படி 17 பள்ளிச் சிறுமிகள் உட்பட 25க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் தொழிலில் இக்கும்பல் தள்ளியிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், பாலியல் தொழிலில் தள்ளிய சிறுமிகளை முதியவர்களை குறி வைத்து அதிகளவில் அவர்களுக்கு அனுப்பி வைத்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த முதியவர்கள் வசதி படைத்தவர்களாகவும், பாலியல் முகவர்களுக்கு அதிகளவில் பணமும் கொடுத்தவர்களாகவும் இருந்துள்ளனர். சில நேரங்களில் மாணவிகளை விமானம் மூலம் வெளி மாநிலங்களுக்கும் பாலியல் கும்பல் அழைத்துச் சென்ற பரபரப்பு தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளது. இதையடுத்து இந்த வழக்கின் முழு பின்னணி குறித்தும் பாலியல் தடுப்பு பிரிவு உதவி ஆணையர் ராஜலட்சுமி தலைமையிலான போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.