கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் முஸ்லிம்கள் 14.2 சதவீதம் உள்ளனர். ஆனால் பாஜக சார்பில் முஸ்லிம்கள் போட்டியிடுவது வெகுவாகக் குறைந்து வருகிறது. இத்தனைக்கும், சர்வதேச அளவில் தங்கள் கட்சி மட்டுமே பெரிய அரசியல் கட்சி என பாஜக கூறி வருகிறது. இருப்பினும், தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்யும் பாஜகவில் முஸ்லிம் ஒருவர் கூட மக்களவை எம்.பி.யாக இல்லை.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 6 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளித்தது. இவர்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இந்த முறை பாஜக சார்பில் ஒரே முஸ்லிம் வேட்பாளராக எம்.அப்துல் சலாம் போட்டியிடுகிறார். கோழிக்கோடு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான இவருக்கு, கேரளாவின் மலப்புரம் தொகுதியில் பாஜக வாய்ப்பளித்துள்ளது.
எனினும், பேராசிரியர் அப்துல் சலாமிற்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாகக் கருதப்படுகிறது. மலப்புரம் அருகிலுள்ள பாலக்காடு தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் ‘ரோடு ஷோ’ வாகனத்தில் செல்ல அப்துல் சலாம் அனுமதிக்கப்படவில்லை.
எனவே, மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக தலைமையில் ஆட்சி அமைந்தால் அது முஸ்லிம் எம்.பி.க்களே இல்லாத அரசாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் 29 மாநிலங்களில் பாஜக தனித்தும் ஆதரவு அளித்தும் 18 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இந்த 18 மாநிலங்களிலும் கூட பாஜக சார்பில் ஒரு முஸ்லிம் கூட எம்எல்ஏவாக இல்லை.
இந்த முறை மக்களவை தேர்தல் தொடங்குவதற்கு முன் முஸ்லிம்கள் அதிகம் கொண்ட உ.பி.யில் அவர்களைக் கவர பல கூட்டங்களை பாஜகவினர் நடத்தினர். இதில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பாஜகவின் தற்போதைய ஆட்சியில் முஸ்லிம்களை விட அதிகமாக கிறிஸ்தவர் மற்றும் சீக்கியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய மத்திய அமைச்சரவையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சராக சீக்கியரான ஹர்தீப்சிங் புரி உள்ளார். கிறிஸ்தவரான ஜான் பர்லா, சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சராக தொடர்கிறார்.