திருப்பதி கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சாமி தரிசனம் செய்தார். இதையொட்டி திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏழாவது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. இந்த ஏழாம் கட்டத்தில், 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதன்படி பீகாரில் 8, சண்டிகரில் 1, இமாச்சலப் பிரதேசத்தில் 4, ஜார்க்கண்டில் 3, ஒடிசாவில் 6, பஞ்சாபில் 13, உத்தரப்பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு கடைசி கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்ய கன்னியாகுமரிக்கு நேற்று வந்துள்ளார். சனிக்கிழமை வரை அவர் தியானம் செய்கிறார்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு நேற்று வருகை தந்தார். வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சியில் வந்திறங்கிய அவர், அங்கிருந்து புதுக்கோட்டைக்கு சென்று அங்குள்ள திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். இதன் பின் தமிழக பயணத்தை முடித்துக் கொண்டு அமித்ஷா திருப்பதிக்குச் சென்றார்.
திருப்பதியில் சாமி தரினம் செய்ய அமித் ஷா, தனது மனைவி சோனல் ஷாவுடன் ரேணுகுண்டா விமான நிலையத்திற்கு இன்று வந்தார். அங்கிருந்து காரில் திருப்பதிக்குச் சென்றார். அங்கு அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தலைமை பூசாரியின் வேத பாராயணங்களுக்கு மத்தியில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையை முன்னிட்டு திருப்பதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.