“பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வார்கள். மேலும் அதிகாரிகளுக்கு ரேவண்ணா ஒத்துழைத்ததாக தெரிகிறது” என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருந்து நள்ளிரவு 12.50 மணிக்கு வந்தார். முன்னதாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், எஸ்ஐடி அவரை காவலில் எடுத்துள்ளது. ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் யாரேனும் இருப்பின் தாமாக முன்வந்து புகாரளிக்குமாறு முன்பே கூறியுள்ளோம். இந்த வழக்கின் முன்னேற்றம் குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக எனக்கு இன்னும் அதிக தகவல் தெரியவில்லை. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வார்கள். மேலும் அதிகாரிகளுக்கு ரேவண்ணா தேவையான ஒத்துழைப்பை அளித்து வருவதாகத் தெரிகிறது. அதிகாரிகள் தற்போது அவரை காவலில் வைத்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணாவின் வழக்கறிஞர் அருண் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “விசாரணைக்கு ஒத்துழைக்க பெங்களூரு வந்ததால் தன்னை பற்றி எந்த எதிர்மறையான பிரச்சாரமும் வேண்டாம் என ஊடகங்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார். தான் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்” என்றார்.