கர்நாடகாவில் அரசு ஊழியர் தற்கொலை செய்த விவகாரம் : அமைச்சருக்கு நெருக்கடி கொடுக்கும் பாஜக

ரூ.87 கோடி நிதி முறைகேட்டில் சிக்கிய அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் பி.நாகேந்திரன் பதவி விலக வேண்டும் என அம்மாநில பாஜக மூத்த தலைவர் ஆர்.அசோகா வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக மகரிஷி வால்மீகி பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தின் (கேஎம்விஎஸ்டிடிசி) கண்காணிப்பாளராக இருந்து வந்தவர் பி.சந்திரசேகரன் (50). கேஎம்விஎஸ்டிடிசி நிறுவனத்தில் ரூ.87 கோடி நிதி முறைகேடுக்கு சந்திரசேகரனை, மூத்த அதிகாரிகள் பொறுப்பாக்கியதாக குற்றம் சுமத்தி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சிவமோகாவில் அவர் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பாக சந்திரசேகரன் 6 பக்க கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில் நிதி முறைகேடு தொடர்பாக பழங்குடியினர் கழக நிர்வாக இயக்குநர் ஜே.ஜி. த்மநாபா, கணக்காளர் பரசுராம் மற்றும் பெங்களூரு யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா கிளை தலைமை மேலாளர் சுசிதா ஆகியோர் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக சந்திரசேகரன் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கிடையே சிவமோகாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சன்னபாஸப்பா, “அமைச்சர் நாகேந்திரா அறிவுறுத்தலின் பேரில், தான் பல கோடி ரூபாயை பரிமாற்றம் செய்ததாக சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் ஊழலை அம்பலப்படுத்தியுள்ளது.” என தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பி.நாகேந்திரா, பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.

இந்நிலையில், கர்நாடகா பாஜக மூத்த தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.அசோகா கூறுகையில், “ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அமைச்சர் நாகேந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த வழக்கை குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) பதிலாக, மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல், கர்நாடகா மாநில பாஜக தலைவரான பி.ஒய்.விஜயேந்திராவும், அமைச்சர் நாகேந்திராவை பதவி விலக வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், “அமைச்சர் நாகேந்திரா வரவழைக்கப்பட்டு அவரிடம் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்கப்படும்” என தெரிவித்துள்ளார்.