‘வெப்ப அலையை கையாள்வதில் மெத்தனம்’ – டெல்லி அரசை சாடும் துணை நிலை ஆளுநர்

டெல்லியில் வெப்ப அலையை சமாளிக்க அரசு எந்த செயல் திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை என கூறி அம்மாநில அரசுக்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி, ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் கோடை வெப்பம் நிலவுகிறது. அங்கு வெப்ப அலை தாக்கம் நிலவுவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்கள் வெப்ப வாதத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை பின்பற்றுமாறு அந்தந்த மாநில அரசுகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

இந்நிலையில் டெல்லியில் வெப்ப அலையை சமாளிக்க அரசு எந்த செயல் திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை என அம்மாநில துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் வெப்ப வாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான பல நடவடிக்கைகளை துணை நிலை ஆளுநர் அறிவித்ததைத் தொடர்ந்து ஆளுநர் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக துணை நிலை ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ஆஷிஷ் குந்த்ரா, டெல்லி தலைமைச் செயலாளர் நரேஷ் குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “வெப்ப அலையின் தீவிரம் வழக்கத்துக்கு மாறாக உள்ளது. மாநில அரசால் அத்தகைய அறிவுறுத்தல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை துணைநிலை ஆளுநர் கவனித்துள்ளார்.

சாதாரணமாக, நகரத்தில் வெப்பச் செயல் திட்டத்துக்காக முதலமைச்சர் அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர் ஒரு கூட்டத்தை கூட்டுவார் என அவர் எதிர்பார்த்திருந்தார். வெப்ப அலையை கையாள்வதில் தீவிரத்தன்மை இல்லாதது அவருக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, அனைத்து கட்டுமானத் தளங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கு ஊதியக் குறைப்பு இல்லாமல் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை இடைவேளை அளிக்க வேண்டும். வெயிலில் காத்திருக்கும் பயணிகளுக்கும், மற்ற பாதசாரிகளுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில், பேருந்து நிறுத்த நிழற்கூடங்களில் மண் பானைகளில் குடிநீர் வைக்க வேண்டும் என துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.

துணை நிலை ஆளுநரின் கண்டனத்துக்கு பதிலளித்துள்ள டெல்லி சுகாதார அமைச்சர் சவுரப் பரத்வாஜ், “துணை நிலை ஆளுநர் எங்களை தவறாக காட்ட விரும்புகிறார். ஆளுநர் மாளிகை நடவடிக்கைக்கு முன்னதாக கடந்த மார்ச் மாதம் முதலே வெப்ப அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது” என்றார்.