விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தோட்டக்கலை மற்றும் வேளாண் அலுவலர்கள் சம்பந்தமான நேர்முகத் தேர்வில், எழுத்து தேர்தவில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் மூன்று இடங்களில் வந்தவர்களுக்கு குறைவான மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் சேவை பெரும் உரிமை திட்டம் சம்பந்தமாக சட்டம் இயற்றப்பட வேண்டும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை ஏறும் போது விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அனைத்து காலங்களிலும் ஒரே மாதிரியான விலை நிர்ணயம் செய்வதோடு விலை கொள்முதல் சட்டத்தை நிறைவேற்றி பழம் மற்றும் காய்கறிகள் கெட்டுப் போகாமல் பாதுகாக்க குளிர்சாதன கிடங்குகளை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் கந்து வட்டி கொடுமையால் உயிர் பலிகள் ஏற்படுகின்றது, இதற்கு காவல் துறை உடந்தையாக இருக்கிறது.
இதனால் கந்து வட்டி தண்டனைச் சட்டத்தை தீவிரமாக பயன்படுத்த வேண்டும். கன்னியாகுமரியில் பிரதமர் தியானம் செய்வதில் எந்த விதமான தவறும் இல்லை என்றார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறாரே என செய்தியாளர்கள் ராமதாசிடம் கேட்டதற்கு, அதற்கு அவர், ‘‘அந்த அம்மையாரை அவர் அப்படி பார்க்கிறார் அதில் என்ன தப்பு இருக்கிறது’’ என்றார்.